search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு"

    • குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
    • பெயர்க்குழப்பம் காரணமாக செய்தி ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில,

    தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 06.09.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலராக குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.கண்ணன் என்பவருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

    மாறாக திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியராகப் பணிபுரிந்த து.கண்ணன் என்பவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு அளிக்கப்பட்ட து.கண்ணன் என்பவருக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பெயர்க்குழப்பம் காரணமாக செய்தி ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளனர்.

    • தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
    • போலீசார் தனித்துவிடப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது.

    இதனை எதிர்த்த வழக்கில், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை கணக்கெடுக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு தடை கேட்டு தூத்துக்குடி நில எடுப்பு தாசில்தார் சந்திரன், சிப்காட் டாஸ்மாக் டெப்போ மேலாளர் கண்ணன், தூத்துக்குடி மண்டல துணை தாசில்தார் சேகர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

    அப்போது போலீஸ் அதிகாரிகள் சார்பில் வக்கீல் பி.பாலாஜியுடன் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி, 'ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் இந்த விவகாரம் பந்தாடப்படுகிறது. இதை அனுமதிக்க முடியாது.

    போலீசார் தனித்துவிடப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரை விட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது' என வாதிட்டார்.

    வாதங்களை பதிவுகளை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 'துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை கணக்கிடுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

    மேலும் மேல்முறையீட்டு மனுக்களுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு மற்றும் எதிர்மனுதாரர்களான மனித உரிமை ஆர்வலர் என்ட்ரி டிபேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அர்ஜூனன் உள்ளிடடோருக்கு உத்தரவிட்டது.

    • லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டிஜிபி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த சொத்துக்களை வாங்குவதற்கான வருவாய் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்க வேண்டியுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டிஜிபி ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்து வைத்தது எப்படி நியாயம் ஆகும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் செல்வது சமூகத்துக்கு மோசமானது. அனுமதி இன்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரிவித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எல்லோரும் எங்கு இருந்தார்கள் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை.
    • துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது.

    தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    அந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது. அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக, தலா ரூ. 5 லட்சம் வீதம், 65 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தேசிய மனித உரிமை ஆணையம் பின்னர் அந்த வழக்கை முடித்து வைத்தது.

    இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு விசாரணையில், மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என துணை காவல் கண்காணிப்பாளர் தரப்பு வாதம் முன்வைத்தது.

    இந்த வாத்தை ஹென்றி திபேன் தரப்பு ஏற்க மறுத்தது. மனித உரிமை ஆணைய சட்டப்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும் என்று மனுதாரர் தெரிவித்தார்.

    இதனையடுத்து சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது என்றும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்றும் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று ஆட்சேபம் தெரிவித்தார்.

    இதனையடுத்து கருது தெரிவித்த நீதிபதி, "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை" அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    இறுதியாக எதிர் மனுதாரரின் ஆட்சேபத்திற்கு பதில் அளிக்கும் படி மனுதாரருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 15 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
    • இந்த அறிக்கை மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தூத்துக்குடியில் கடந்த ஆட்சிக் காலத்தில் 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது. அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன.

    நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தவறான தகவல்களை சில ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசால் நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின்மீது, பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக, தலா ரூ. 5 லட்சம் வீதம், 65 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டது.

    காவல்துறையினரால் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதுசெய்யப்பட்ட 93 நபர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் நிவாரணத் தொகையாக ரூ. 93 லட்சம் வழங்கப்பட்டது. மேற்காணும் நிகழ்வு தொடர்பாக போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

    இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பரத்ராஜ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்ததால், அவரின் தாயாருக்கு நிவாரணத் தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டு, அவர்கள்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பின்னர் திரும்பப்பெறப்பட்ட 38 வழக்குகளில், சம்பந்தப்பட்ட நபர்களின் உயர் கல்விக்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும் "தடையில்லாச் சான்றிதழ்" வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 17 காவல்துறை அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சைலேஷ்குமார் யாதவ், இ.கா.ப., கபில்குமார் சி. சரத்கர், இ.கா.ப. ஆகிய இந்திய காவல்பணி அலுவலர்கள், மகேந்திரன், லிங்கத்திருமாறன் ஆகிய காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 2 ஆய்வாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதுதவிர, ஒரு காவல்துறை ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஒருவர் மீது குற்ற வழக்கு பதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெருந்தண்டனை குற்றப்பிரிவின் கீழ், ஒரு உதவி ஆய்வாளர், 2 இரண்டாம் நிலைக் காவலர், ஒரு முதல் நிலைக் காவலர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 முதல் நிலைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையின் பரிந்துரையின் அடிப்படையில், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், அந்த சம்பவத்தை, படமாக இயக்குவதாக இயக்குநர் சந்தோஷ் கோபால் அறிவித்துள்ளார். #May22OruSambavam #TuticorinShootOut
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.

    இதில் ஏற்பட்ட கலவரத்தால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திரைப்படமாகிறது. ஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை போன்ற தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளை படமாக்கி வரும் இயக்குநர் சந்தோஷ் கோபால் இந்தப் படத்தையும் எடுக்க உள்ளார்.



    இவர், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்தவர். படத்துக்கு “மே 22 ஒரு சம்பவம்“ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அஹிம்சா புரடக்‌ஷன்ஸ் சார்பில் இரண்டாவது படமாக “மே 22 ஒரு சம்பவம்’’ உருவாகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சுவிட்சர்லாந்து, டாவோஸ்சில் உள்ள உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது.

    இதுகுறித்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் கோபால் பேசுகையில், ‘சமீப காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சார்ந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட உள்ளது.

    ஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகிறது. தமிழகத்தின் இந்த மூன்று பிரச்னைகளுக்கும் காரணம், கார்ப்பரேட். இதனால் கார்ப்பரேட் அரசியலை மையப்படுத்தி கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையப்படுத்தி நான் இயக்கியுள்ள திரைப்படம் விரைவில் வெளியாகும்’’ என்றார். #May22OruSambavam #SterliteProtest #TuticorinShootOut #SanthoshGopal

    கூவத்தூரில் நடந்ததை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கூறுவதால் தன் உயிர் போகும் என்றால் போகட்டும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார். #Karunas #Koovathur
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கடுமையாக கண்டித்தவர்களில் நானும் ஒருவன். போராடிய மக்களுக்கு ஆதரவாகவும், தூத்துக்குடி சம்பவத்திற்கு எதிராகவும் பேசியதற்காகவும் பழிவாங்கப்படுகிறேன். நான் ஒரு சமுதாயவாதி.

    நான் கூட்டணி கட்சி தலைவர், தோழமை கட்சி என்ற மரியாதை கூட கொடுக்காமல் கண்ணியமற்று பேசி வருகின்றனர்.

    நான் லொடுக்கு பாண்டி அல்ல. லொடுக்கு பாண்டியன், பெயரை சரியாக உச்சரியுங்கள். முக்குலத்து சமுதாய மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். அதை வரும் தேர்தலில் முக்குலத்து மக்கள் காண்பிப்பார்கள்.

    கோப்புப்படம்

    கூவத்தூரில் நடந்ததை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கூறுவேன், அப்படி கூறுவதால் என் உயிர் போகும் என்றால் போகட்டும், சமுதாயத்திற்காக என் உயிர் போகட்டும். இந்திய அளவில் மோடி அரசு டெபாசிட் இழக்கும்.

    நான் முக்குலத்தோர் புலிப்படை என போஸ்டர் ஒட்டினால் வழக்குப்பதிவு செய்கிறீர்கள், நேற்று அண்ணா சாலையில் வைக்கப்பட்ட பேனர்களுக்கு யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்?

    எடப்பாடி அரசு தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதித்து வருகிறது. அமைச்சர்கள் நிலையறிந்து பேசவேண்டும், நானாவது தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் சீட் வாங்கி வென்றவன்.

    அமைச்சர்கள் இருந்த நிலையை மறக்க வேண்டாம்.

    எத்தனையோ சிலைகள் மெரினாவில் இருக்கிறது, மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப முக்கிய சாலையில் சிவாஜி கணேசனின் சிலையை நிறுவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கருணாசை தினகரன் ஆதரவாளரும், அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரத்தினசபாபதி சந்தித்து பேசினார். #Karunas #Koovathur
    தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்படவே, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    தூத்துக்குடி போராட்டத்தில் தொடர்புடையவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரித்து வருகிறது ஆணையம். இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கிளாஸ்டன் என்பவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    விசாரணை ஆணையத்தில் வரும் 29-ம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராகுமாறும், வரும் போது உடன் ஒருவரை அழைத்து வர வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பொதுமக்களை போலீசார் குறிபார்த்து சுட்டு கொன்றதாக மக்கள் பொது விசாரணை குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. #Thoothukudifiring
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த மக்கள் பொது விசாரணை குழு அறிக்கை சென்னை லயோலா கல்லூரியில் நேற்று வெளியிடப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூ‌ஷன் அறிக்கையை வெளியிட வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பெற்றுக் கொண்டார்.

    அதில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    * தூத்துக்குடியில் மே 22-ந்தேதி நடைபெற்ற ஊர்வலத்தில் குடும்பம் குடும்பமாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஏராளமானோர் பங்கேற்பது பற்றி மாவட்ட நிர்வாகம் அறிந்திருந்தும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் கடமையை புறக்கணித்துள்ளது.

    * கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    * மாவட்ட நிர்வாகம் தன் கடமையை புறக்கணித்து திட்டமிட்டு ஓடி ஒளிந்து கொண்டதால்தான் வன்முறையும் இறப்புகளும் பெரிய அளவில் நடந்து விட்டது.

    * பொதுமக்களுக்கு காவல்துறை உதவுவதற்கு பதிலாக அராஜகத்தில் ஈடுபட்டது. கூட்டத்தை கலைக்க முறையான சட்ட விதிகளை கடைபிடிக்கவில்லை.

    * ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வன்முறையில் ஈடுபடாதபோது பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தி மக்களை காயப்படுத்தி அச்சுறுத்தி உள்ளனர்.

    * சீருடையில் இல்லாத சாதாரண உடை அணிந்த காவலர்கள் போலீஸ் வாகனங்களில் மேல் ஏறி கூட்டத்தினரை குறி வைத்து சுடுவதும், மக்களை கொல்வதும் போலீசாரின் அத்துமீறலாகும்.

    * பெண்கள், குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்தியது. இதன் பின்னணியில் உயர் காவல்துறை அதிகாரிகளின் பங்கு குறித்து முழு விசாரணை தொடங்க வேண்டும்.



    * ஊர்வலம் நடந்த பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள திரேஸ்புரத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் ஜான்சியின் கொலை நடந்துள்ளது. இது போலீசாரின் செயல் என்று பரவலாக நம்பப்படுகிறது.

    * துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிறகும் மக்களை வீடு தேடி கைது செய்வதும் சட்டத்துக்கு புறம்பாக காவலில் வைப்பதும் தொடர் சம்பவமாகி விட்டது. இதை அனுமதிக்க முடியாது.

    தூத்துக்குடியில் இப்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லாத நிலையில் அளவுக்கு அதிகமாக போலீசார் அங்கு இருப்பது தேவை இல்லாத ஒன்று.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திலக், செல்வராஜ், ஷிவ் விசுவநாதன், கிறிஸ்து தாஸ் காந்தி, கீதா, கவிதா, ஜோசையா, தீபக்நாதன், டாம்தாமஸ் உள்பட பலர் பங்கேற்றனர். #Thoothukudifiring
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்ட மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியது. #ThoothukudiFiring #SC
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் நீண்ட நாட்களாக போராடி வந்தனர். கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    போலீசாரின் இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளும் நடந்து வருகிறது.

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கேட்டு தே.மு.தி.க.வை சேர்ந்த ஜி.எஸ்.மணி என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



    அவர் தனது மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் எனவும், கோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அத்துடன் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சமும், படுகாயமடைந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சமும் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வக்கீல் ஜி.எஸ்.மணியே நேரில் ஆஜரானார்.

    வழக்கின் விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், ‘இது போன்ற மனுக்கள் ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருவதால், இதனை இங்கு விசாரணைக்கு ஏற்க முடியாது’ என்று அறிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் மனுதாரர் சென்னை ஐகோர்ட்டை அணுகலாம் என்றும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர். #ThoothukudiFiring #SC
    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி கேட்பது நமது உரிமை. கேள்வி கேட்காவிட்டால் நம் கையை எடுத்து நம் கண்ணிலேயே குத்துவார்கள் என்றார். #Prakashraj
    சி.ஐ.டி நகரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் ’மறக்க முடியுமா தூத்துக்குடியை’ என்ற தலைப்பில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பேசியதாவது:-

    ‘‘ரியல் எஸ்டேட் போல தமிழகம் மாறி வருகிறது. அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. மக்கள் அவர்களை வேண்டாம் என்று முடிவு எடுத்து பல காலங்கள் ஆகிவிட்டது. காது இல்லாதவர்களிடம் பேசுவது வீண். என்னை யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதைப்பற்றி நான் கவலைபட மாட்டேன்.

    தூத்துக்குடியில் நடந்தவற்றையும், நடப்பவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாட்டு மக்களை அச்சத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அப்படி பயமுறுத்தி ஆள்பவர்களின் முடிவு மோசமானதாக இருக்கும்.



    நான் ஏன் நேரடி அரசியலுக்கு வர மறுக்கிறேன் என்றால் தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. நான் அரசியலில் தான் இருக்கிறேன். ஆனால் அரசியல்வாதியாக இல்லை. சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச நினைக்கிறேன். என்னை போன்றோரின் குரல் மக்களுக்கு தேவை. கேள்வி கேட்பது நமது உரிமை. கேள்வி கேட்காவிட்டால் நம் கையை எடுத்து நம் கண்ணிலேயே குத்துவார்கள்’’.

    இவ்வாறு அவர் பேசினார். #Prakashraj #TuticorinShootOut #BanSterlite

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 அரசு ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே ராஜேந்திரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன்பதில் இன்று பதில் தாக்கல் செய்தார். 

    அதில், துப்பாக்கிச்சூடு நடந்த அன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடினர். அவர்களை கலைக்க எடுக்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஸ்டெர்லைட் வளாக குடியிருப்பில் இருந்த 150 குடும்பங்களையும் பாதுகாக்கும் பொருட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது; அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    ×